நீதிமொழிகள் 15:15-30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.

16. சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

17. பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.

18. கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

19. சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

20. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

21. மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.

22. ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

23. மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

24. கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.

25. அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

26. துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

27. பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

28. நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

29. துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

30. கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.

நீதிமொழிகள் 15