2 சாமுவேல் 14:15-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. இப்பொழுதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால், நான் ராஜாவோடே பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை.

16. என்னையும் என் குமாரனையும் ஏகமாய் தேவனுடைய சுதந்தரத்திற்குப் புறம்பாக்கி, அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்கலாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார்.

17. ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப் போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேக்கூட இருக்கிறார் என்றாள்.

18. அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.

19. அப்பொழுது ராஜா: இதிலெல்லாம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக, ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலது பக்கத்திலாவது இடது பக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப் தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான்.

20. நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப் போல் இருக்கிறது என்றாள்.

21. அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.

22. அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.

23. பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டு வந்தான்.

24. ராஜா: அவன் என் முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.

2 சாமுவேல் 14