1 இராஜாக்கள் 4:13-31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.

14. இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.

15. அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.

16. ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.

17. பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.

18. ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.

19. ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.

20. யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக்குடித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

21. நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள்.

22. நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,

23. கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்ட பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம்.

24. நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது.

25. சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.

26. சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக்குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

27. மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,

28. குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.

29. தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

30. சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும்பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

31. அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.

1 இராஜாக்கள் 4