யாத்திராகமம் 21:22-36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

22. மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.

23. வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,

24. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,

25. சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.

26. ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலை பண்ணிவிடவேண்டும்.

27. அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

28. ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.

29. தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.

30. அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்.

31. அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.

32. அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.

33. ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,

34. குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.

35. ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.

36. அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாக வேண்டும்.

யாத்திராகமம் 21