33. காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
34. அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.
35. ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பி வந்தான்.
36. காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.
37. காகாலோ திரும்பவும்: இதோ, ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான்.
38. அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.
39. அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம்பண்ணினான்.
40. அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல் மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
41. அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான்.
42. மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
43. அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.
44. அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.