1. தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
2. தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.
3. அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.
4. தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
5. உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.
6. என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.
7. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
8. தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா).