42. என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.
43. அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?
44. இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.
45. அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.
46. பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள்.
47. லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.
48. இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது.
49. அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
50. நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது.
51. பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.
52. தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
53. ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
54. பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.
55. லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.