8. ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டு போகவேண்டியது என்ன என்றான்.
9. அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.
10. தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
11. அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
12. அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்,
13. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்குசெய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.
14. மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயை செய்யவேண்டியதும் அல்லாமல்,
15. கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
16. இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,
17. யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.
18. பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்கார வேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
19. காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையிலே உட்கார்ந்திரும்.
20. அப்பொழுது நான் குறிப்பு வைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
21. நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
22. இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.