17. சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்திலே வரவழைத்து,
18. இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்.
19. நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான்.
20. சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சேரப்பண்ணினபின்பு பென்யமீன் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது.
21. அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை.
22. அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.
23. அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.
24. அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.
25. சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.
26. சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள்.
27. ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை இரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கைகொண்டுவராமல் அவனை அசட்டைப்பண்ணினார்கள்; அவனோ காது கேளாதவன்போல இருந்தான்.