1 இராஜாக்கள் 11:22-35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

22. அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

23. எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய்,

24. தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்றுபோடுகையில், அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக் கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆண்டார்கள்.

25. ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்.

26. சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.

27. அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது,

28. யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரியசமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

29. அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில்,

30. அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,

31. யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.

32. ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.

33. அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன்.

34. ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.

35. ஆனாலும் ராஜ்யபாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன்.

1 இராஜாக்கள் 11