5. மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.
6. மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
7. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
8. அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.
9. அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார்.
10. அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
11. அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்களின் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது.
12. ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
13. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
14. விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன்.
15. நீ பூமியில் இராமல் நாசமாய்ப்போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.
16. என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.
17. நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?