2. எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைப்பெற்றுப் போகக்கடவன்.
3. ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.
4. அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.
5. அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,
6. அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினால் குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.
7. ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.
8. அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.
9. அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.
10. அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.