1. பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
2. அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.
3. வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
4. அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
5. ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
6. நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
7. மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.
8. தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.
9. தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
10. ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.
11. மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
12. அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?
13. என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.