3. கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
4. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5. மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.
7. ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.
8. துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9. துன்மார்க்கருடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10. வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
11. பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
12. பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13. மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14. புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.