1. தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
2. புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
3. நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
4. தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
5. தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
6. தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
7. தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்து வருகையில். (சேலா),
8. பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.
9. தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
10. உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
11. ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
12. சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
13. நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.
14. சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.
15. தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.
16. உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
17. தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்த வண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.
18. தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
19. எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா).
20. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.