எரேமியா 23:13-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்.

14. எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.

15. ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.

16. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

17. அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

18. கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?

19. இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும்.

20. கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.

21. அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

22. அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.

23. நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

24. யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 23