8. அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல் நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் செய்த அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
9. இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் சமுகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.
10. மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.
11. அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன்வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும், அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்கு முன்பாக எழுதிவை,
12. ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.
13. முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம்.
14. தரையில் இருக்கிற ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டு முழமும், அகலம் ஒருமுழமும், சின்ன நிலைதுவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலுமுழமும், அகலம் ஒருமுழமுமாயிருக்கும்.
15. பலிபீடத்தின் சிகரம் நாலு முழ உயரமுமாயிருக்கும்; பலிபீடத்தின் சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள் இருக்கும்.
16. பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன் நாலு பக்கங்களிலும் நாற்சதுரமுமாயிருக்கும்.
17. அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதிநாலு முழமும், அகலம் பதிநாலு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும், அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராயிருக்கும் என்றார்.
18. பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; பலிபீடத்தை உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன: