10. தகப்பனை நிர்வாணமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.
11. உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.
12. இரத்தஞ்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னைமறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
13. இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.
14. நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
15. நான் உன்னைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன்,
16. நீ புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.
17. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18. மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.
19. ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களெல்லாரும் களிம்பாய்ப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன்.
20. வெள்ளியையும், பித்தளையையும், இரும்பையும், ஈயத்தையும், தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன்.
21. நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள்.
22. குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்து கொள்வீர்கள் என்றார்.