உபாகமம் 32:8-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.

9. கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்.

10. பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.

11. கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

12. கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

13. பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.

14. பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.

15. யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

16. அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.

17. அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.

உபாகமம் 32