20. என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
21. நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.
22. கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
23. உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
24. உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
25. உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.
26. உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள்.
27. நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
28. கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
29. குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோகும்; உதவி செய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.
30. பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
31. உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போகும்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.