1. யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.
2. அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது.
3. அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.
4. யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.
5. அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.
6. அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.
7. அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.
8. அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.
9. அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டுருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
10. யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
11. பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,
12. தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.
13. லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான்.
14. அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
15. பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.