ஆதியாகமம் 21:1-13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

2. ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

3. அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.

4. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்,

5. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.

6. அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக்கேட்கிற யாவரும் என்னோடகூட நகைப்பார்கள்.

7. சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.

8. பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணினான்.

9. பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,

10. ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.

11. தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.

12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

ஆதியாகமம் 21