2 சாமுவேல் 3:10-26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

10. கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.

11. அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதினால், அப்புறம் ஒரு மறுமொழியும் அவனுக்குச் சொல்லாதிருந்தான்.

12. அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கைபண்ணும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.

13. அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன்; ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவெனில், நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,

14. அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.

15. அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்து வர ஆட்களை அனுப்பினான்.

16. அவள் புருஷன் பகூரீம் மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.

17. அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே.

18. இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால், என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.

19. இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும், சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.

20. அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.

21. பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடேபோனான்.

22. தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு, தண்டிலிருந்து கொண்டு வந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான்.

23. யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.

24. அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?

25. நேரின் குமாரனாகிய அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம் போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்.

26. யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும் போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.

2 சாமுவேல் 3