4. ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.
5. மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
6. பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
7. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
8. அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
9. அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல் மூண்டது.
10. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
11. கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானார்.
12. ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
13. அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
14. கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்.
15. அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
16. கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.