2 சாமுவேல் 19:30-43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

30. அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

31. கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான் மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்து வந்தான்.

32. பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.

33. ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.

34. பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர. நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?

35. இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்வேண்டியது என்ன?

36. அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?

37. நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.

38. அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.

39. ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.

40. ராஜா கடந்து, கில்கால்மட்டும் போனான்; கிம்காம் அவனோடேகூடக் கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி ஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு,

41. இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதா மனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.

42. அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.

43. இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.

2 சாமுவேல் 19