16. அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.
17. அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
18. அப்சலோம் உயிரோடே இருக்கையில்: என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
19. சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.
20. யோவாப் அவனை நோக்கி: இன்னைறயதினம் நீ செய்தியைக் கொண்டு போகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டு போகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
21. யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
22. சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
23. அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.
24. தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனிவாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,
25. கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால், அவன் வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடிகிட்டவரும்போது,
26. ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
27. மேலும் ஜாமங்காக்கிறவன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
28. அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
29. அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.