2 இராஜாக்கள் 4:4-22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

4. உள்ளேபோய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.

5. அவள் அவனிடத்திலிருந்துபோய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.

6. அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று.

7. அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.

8. பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.

9. அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.

10. நாம் மெத்தையின்மேல் ஒருசிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.

11. ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறை வீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.

12. அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.

13. அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.

14. அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.

15. அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.

16. அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒருகுமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.

17. அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள்.

18. அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும்போது,

19. தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.

20. அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.

21. அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய்,

22. தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒருகழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

2 இராஜாக்கள் 4