1. இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
2. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.
3. நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
4. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
5. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
6. இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
7. (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
8. பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
9. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.