22. அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.
23. கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்தசன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:
24. யூதா புத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்த சன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
25. சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
26. லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
27. ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும்,
28. பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
29. பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள்.
30. எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர்பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
31. மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர்.
32. இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
33. செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்து நிற்கிறதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
34. நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
35. தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
36. ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
37. யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.