1 சாமுவேல் 9:7-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

7. அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்னத்தைக் கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போயிற்று; தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான்.

8. அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.

9. முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான்.

10. அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனை நோக்கி: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.

11. அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.

12. அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.

13. நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம் பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள்.

14. அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.

15. சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காது கேட்க:

16. நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

1 சாமுவேல் 9