4. கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,
5. மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
6. கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
7. அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக்கட்டி,
8. அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,
9. அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைத் கட்டினான்.
10. பின்பு மோசே, அபிஷேகதைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,
11. அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படிக்கு அபிஷேகம்பண்ணி,
12. அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.
13. பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக்கட்டி, குல்லாக்களைத் தரித்து,
14. பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
15. அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.
16. பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
17. காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
18. பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
19. அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
20. ஆட்டுக்கடா சந்துசந்தாகத் துண்டிக்கப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.