1. சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
2. அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான்.
3. அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.
4. மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
5. இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,
6. தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
7. ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
8. அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
9. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.
10. மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.