13. ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.
14. பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார்.
15. அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
17. அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
18. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
19. மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
20. ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
21. இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
22. விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
23. மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
24. தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள் என்றார்.
25. அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
26. இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
27. இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.