1. பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக:
2. சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்.
3. அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
4. இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
5. நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
6. அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
7. இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
8. நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
9. தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?
10. இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
11. நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,
12. பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
13. நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
14. அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன்.