12. முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13. அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
14. இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
15. இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
16. அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
17. அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
18. அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.
19. அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
20. அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.
21. அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.
22. அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
23. அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும்பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
24. அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
25. அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித் திரியப்பண்ணுகிறார்.