12. அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
13. இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.
14. லேவியரின் கோத்திரத்துக்கு மாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.
15. மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.
16. அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்குமுள்ள சமபூமி முழுவதும்,
17. சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
18. யாகசா, கெதெமோத், மேபாகாத்,
19. கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
20. பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான
21. சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
22. இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.