13. அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.
14. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
15. பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
16. அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள்.
17. ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.
18. அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள்.
19. நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
20. யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
21. ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
22. அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
23. அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.
24. அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
25. அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.
26. அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.