யாத்திராகமம் 15:1-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

2. கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

3. கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

4. பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனார்கள்.

5. ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.

6. கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.

7. உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.

8. உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.

9. தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

10. உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

11. கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

12. நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.

13. நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழி நடத்தினீர்.

14. ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.

15. ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.

16. பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.

யாத்திராகமம் 15