1. அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
2. ஆறுநாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.
3. அவருடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.
4. அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
5. அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
6. அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்.
7. அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று..
8. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10. மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:
11. எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
12. அவர் பிரதியுத்தரமாக: எலியாமுந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.
13. ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
14. பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.
15. ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.
16. அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
17. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
18. அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
19. அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.