11. எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக்கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
12. அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
13. அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள்.
14. அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்தசெய்கைகள் விளங்குகிறது என்றான்.
15. சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள்.
16. ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம்பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான்.
17. ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது,
18. யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக்காவலில் வைத்திருந்தான்.
19. ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று.