மாற்கு 1:32-45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

32. சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.

33. பட்டணத்தார் எல்லாரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.

34. பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

35. அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

36. சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,

37. அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.

38. அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;

39. கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

40. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.

41. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

42. இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.

43. அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;

44. ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.

45. அவனோ புறப்பட்டுப்போய்; இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

மாற்கு 1