28. ஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29. அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.
30. இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
31. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32. ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33. வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
34. கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.
35. தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36. பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37. கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39. அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.