மத்தேயு 12:31-47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

31. ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.

32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

33. மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

34. விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

35. நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

37. ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

38. அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.

39. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

40. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

41. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

42. தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.

43. அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:

44. நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு,

45. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.

46. இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.

47. அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.

மத்தேயு 12