7. என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.
8. இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
9. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,
10. தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
11. நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
12. சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
13. அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,
14. சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
15. சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
16. சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
17. சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
18. இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
19. அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.
20. நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
21. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.