1. பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜனனநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.
2. விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.
3. நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
4. ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும்.
5. ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
6. மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.
7. இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
8. ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
9. உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
10. இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
11. சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு.
12. ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.
13. தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?