நெகேமியா 9:4-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

4. யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.

5. பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

6. நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.

7. ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.

8. அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி. உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.

9. எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர்.

10. பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர்.

11. நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.

12. நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும். அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.

13. நீர் சீனாய்மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.

14. உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.

15. அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

16. எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.

நெகேமியா 9