10. ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.
11. மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
12. அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?
13. என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.
14. அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.
15. துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
16. நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
17. உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
18. கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
19. பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
20. துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கருடைய விளக்கு அணைந்துபோகும்.
21. என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே.
22. சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?
23. பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
24. துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.
25. அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
26. செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.