1. அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது, எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடே பலத்த வாக்குவாதம்பண்ணினார்.
2. அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?
3. தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.
4. கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின்தொடர்ந்தார்கள்.
5. அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
6. அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.
7. அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
8. அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.