நியாயாதிபதிகள் 19:2-13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

2. அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலு மாதம் வரைக்கும் இருந்தாள்.

3. அவள் புருஷன் அவளோடே நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்து வரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்துக்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனைக்கண்டபோது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு,

4. ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள்.

5. நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள்; பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.

6. அவர்கள் உட்கார்ந்து, இருவரும் கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.

7. அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.

8. ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.

9. பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.

10. அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள்மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.

11. அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.

12. அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,

13. தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்து போவோம் வா என்றான்.

நியாயாதிபதிகள் 19