சங்கீதம் 78:38-56 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

38. அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

39. அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.

40. எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.

41. அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.

42. அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற் போனார்கள்.

43. அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

44. அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார்.

45. அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

46. அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.

47. கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,

48. அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.

49. தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

50. அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

51. எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து:

52. தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;

53. அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது.

54. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,

55. அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.

56. ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,

சங்கீதம் 78